கேமிங் மூலம் நான் பயின்ற வாழ்க்கைத் திறன்கள்

அறிமுகம்

முதலில், வாழ்க்கையில் நாம் அனைவரும் ஒருமுறையாவது வீடியோ கேம்களை விளையாடி இருப்போம். கேம்கள் விளையாடுவதை பலர் ஒரு பொழுதுபோக்கு அம்சமாக பார்க்கின்றனர். ஆனால் இதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும், வாழ்வியல் திறன்களை வளர்த்துக் கொள்ள முடியும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. அதுமட்டுமின்றி பலர் இதற்கு அடிமையாகி விடுவோம் என்று அஞ்சுகின்றனர். முதலில் இந்த எண்ணங்களை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். மனதை நம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் எதற்கும் அடிமையாக தேவையில்லை. நாம் விளையாடும் கேம்களை நேரலையில் அல்லது வீடியோவாக பதிவு செய்து யூட்யூப் மற்றும் ட்விட்டர் போன்ற தளங்களில் வெளியிட்டு பணம் சம்பாதிக்க முடியும். வித விதமான கேம்களை விளையாடும் பொழுது நம்முடைய மூளை பல்வேறு கோணங்களில் இருந்து யோசித்து செயல்படும். கேமிங் மூலம் நான் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் வாழ்க்கைத் திறன்களை இந்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.

1. கேமிங் வாயிலாக முடிவெடுக்கும் திறன் எவ்வாறு மேம்படுகிறது?

வாழ்க்கை நம் அனைவருக்கும் எப்பொழுதும் இரு பாதைகளை காண்பிக்கும். இதில் எந்த பாதையை தேர்ந்தெடுத்தால் நமக்கு சிறந்தது என்ற முடிவை நாம் எடுத்தாக வேண்டும். இதுபோன்ற சூழ்நிலையில் நாம் சிந்தித்து நிதானமாக செயல்பட வேண்டியது அவசியம். வீடியோ கேம்களில் இது போன்ற சூழல்கள் அடிக்கடி நம்மைப் பதம் பார்க்க காத்திருக்கும். சில வினாடிகளில் முடிவெடுத்து செயல்பட்டு லெவல்களை முடிக்க வேண்டும். தவறாக செயல்பட்டால் மீண்டும் முதலில் இருந்து தொடங்கி லெவலை முடிக்க வேண்டி இருக்கும். எனவே நம் மூளை இந்த லெவலை எளிதாக முடிக்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க ஆரம்பிக்கும். இது போலத்தான் நம் வாழ்க்கை சூழல்களும். குறைந்த நேரத்தில் துரிதமாக சிந்தித்து, செயல்பட்டு முடிவெடுக்க வேண்டும். நாம் பணியாற்றும் இடத்தில் தவறான முடிவு எடுத்தால் வேலையை இழந்து விடுவோம். மாணவர்கள் தவறான முடிவு எடுத்தால் மதிப்பெண் குறையும். பெற்றோர்கள் தவறான முடிவு எடுத்தால் குழந்தைகளின் வாழ்க்கை பாதிக்கும். சரியான முடிவெடுக்கும் திறனை எளிதாக கேமிங் மூலம் நாம் கற்றுக்கொள்ளலாம்.

2. விடாமுயற்சி மற்றும் போராடும் திறன் இரண்டையும் கேமிங் மூலம் வளர்த்து கொள்ளலாம்

நம் வாழ்வில் இலக்கை அடைந்து வெற்றி காண்பதற்கு மிகவும் அவசியமானது விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கை. விடாமுயற்சி என்பது வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். ஏனென்றால் ஒரு காரியத்தை முயற்சி செய்து வெற்றியடைய முடியவில்லை என்று அதை கைவிடுவது கோழைத்தனம். ஒரு துளி அளவு வாய்ப்பு உள்ளது என்றாலும் அதை முயற்சி செய்து வெற்றி காண்பது நம் வாழ்வை மேம்படுத்தும். என்னுடைய அனுபவத்தில் இந்த திறனை நான் கேமிங் மூலம் நிறைய கற்றுக்கொண்டேன். வீடியோ கேம்களில் கடினமான லெவல்கள் பல நிறைந்திருக்கும். அவற்றை கடந்து சென்றால் தான் இறுதி கட்டத்தை அடைந்து வெற்றி காண முடியும். அது மட்டுமின்றி இதில் கிடைக்கும் அனுபவம் வெற்றியின் சுவை எவ்வாறு இருக்கும் என்பதை உணர்த்துகிறது. சிறிய சிறிய வெற்றிகள் தரும் தன்னம்பிக்கை தான் பெரும் வெற்றிகள் அடைய உத்வேகத்தை தூண்டுகிறது. கேமில் ஒரு முறை தோற்றுவிட்டால், மீண்டும் முயற்சிக்க வேண்டும். இந்த விடாமுயற்சி வாழ்க்கையிலும் வெற்றியடைய விடாமுயற்சியுடன் மீண்டும் மீண்டும் முயற்சிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. கேம்களில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் எதிரிகள் கற்பனையானவை. ஆனால் அதை போராடி வெற்றி பெறும் மனநிலை நமக்குள் ஏற்படுவது உண்மையானவை. விளையாடிய கேம்களை நாம் மறந்தாலும் இந்த திறன்கள் நமக்கு நினைவிருக்கும்.

3. மனம் மற்றும் உடலை ஒரு நிலைப்படுத்தும் திறன்

கேமிங் மட்டுமல்ல எந்த விஷயத்திலும் வெற்றி பெற உடல் மற்றும் மனம் இரண்டுமே ஒரு நிலையாக செயல்பட்டால் தான் வெற்றியடைய முடியும். இந்த இரண்டுமே வீடியோ கேம்களை விளையாடும் பொழுது ஒன்றினைந்து செயல்படும். கேம்களை விளையாடும் பொழுது கண் திரையைப் பார்க்கிறது, கண்கள் பார்ப்பதை மூளை உள்வாங்கி, கைகளுக்கு உத்தரவு கொடுக்கிறது, கைவிரல்கள் ஜாய்ஸ்டிக் பட்டன்களை அழுத்துகிறது. கண்கள், மூளை மற்றும் கைகளின் ஒன்றிணைந்த செயல்பாடு என்பது அனைவருக்கும் சிறப்பாக இருப்பதில்லை. தொடர்ந்து கேம்கள் விளையாடுவதன் மூலம் இந்த மூன்று உறுப்புகளும் சிறப்பாக செயல்படும். இந்த திறன் மாணவர்களுக்கு பெரிதும் தேவைப்படுகிறது. உதாரணமாக ஆசிரியர் ஒரு பாடத்தை போர்டில் எழுதுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இதை வேகமாக நாம் நம் புத்தகத்தில் எழுத வேண்டும். இந்த மூன்று உறுப்புகளும் ஒன்று சேர்ந்து செயல்பட்டால் தான் அந்த செயலை நாம் வேகமாக செய்ய முடியும்.

4. மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது

இன்றைய தலைமுறையினர் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளில் இந்த மன அழுத்தம். மாணவர்கள் தொடங்கி பணியாற்றுபவர்கள் வரை அனைவரும் ஏதோ ஒரு வகையில் மன அழுத்தத்தை சந்திக்கின்றனர். மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற மன அழுத்தம், பணியில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை என அனைவருக்கும் ஒரு காரணத்தால் மன அழுத்தம் உண்டாகிறது. ஏனென்றால் நானும் ஒரு மாணவனாக இருந்து, இன்று பணியாளராக உள்ளேன். அதிக பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தை குறைக்க நான் கையிலெடுக்கும் ஒரு கருவி தான் கேமிங். என்னால் ஒரு காரியத்தை செய்ய முடியவில்லை, முயற்சி செய்தும் தோல்வி அடைகின்றேன் என்ற எண்ணம் தான் மன அழுத்தத்தை தூண்டுகிறது. இதனை அப்படியே இந்த கேமிங் உலகில் ஒப்பிடும்போது நிஜ வாழ்க்கையில் நம்மால் செய்ய முடியாத அனைத்தையும் நாம் வீடியோ கேம்ஸ் உலகில் செய்து பார்க்க முடியும். இதிலிருந்து நமக்கு ஒரு வித்தியாசமான யோசனை கிடைக்கும். அந்த யோசனையை வைத்து நம்மால் செய்ய முடியாமல் போன செயல்களை எளிதாக செய்து வெற்றி காணலாம். மேலும் மூளையை கட்டுப்படுத்தும் திறனையும் இதன் மூலம் வளர்த்துக் கொள்ள முடியும்.

5. பிரச்சினைகளை தீர்க்கும் திறன்

மனித வாழ்க்கையில் இன்பம், துன்பம், நேர்மறை, எதிர்மறை எண்ணங்கள், நன்மைகள், தீமைகள் என அனைத்துமே கலந்திருக்கும். இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தான் நாம் அதிகம் சிந்தனை செய்கின்றோம். நம்மை நோக்கி வரும் ஒவ்வொரு பிரச்சினைகளும் ஒவ்வொரு விதமாக அமையும். இவற்றை சமாளிக்க முடியாமல் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதுவே பின்னர் மன அழுத்தமாக மாறுகிறது. நீங்கள் இதற்கு முன்னர் வீடியோ கேம்கள் விளையாடுவதில் ஆர்வம் காட்டி இருந்தால் உங்களுக்கு தெரியும். எந்த வகையான கேம் ஆனாலும் அதில் நிறைய புதிர்கள் மற்றும் கேள்விகள் நிறைந்திருக்கும். உதாரணமாக காட் ஆஃப் வார் என்ற நான் விரும்பி விளையாடும் ஒரு ஆக்சன், திரில்லர் கேம் ஆகும். இதில் ஏராளமான லெவல்களில் நாம் நிறைய சிந்தித்து செயல்பட வேண்டும். நிறைய புதிர்கள், கேள்விகள், நூலிழையில் தப்பிக்க வேண்டும் என்ற சூழ்நிலைகள் போன்றவை பிரச்சினைகளை எவ்வாறு எளிதாக தீர்ப்பது என்று யோசிக்க வைக்கிறது. இந்த அனுபவம் நம் வாழ்விலும் பல இடங்களில் நமக்கு உதவுகிறது.

6. படைப்பாற்றல் சிந்தனை திறனை கேமிங் மூலம் பெறலாம்

படைப்பாற்றல் திறன் என்பதை கிரியேட்டிவ் திங்கிங் என்றும் அழைக்கப்படுகிறது. எல்லோரிடமும் ஏதாவது ஒரு திறமை இருக்கிறது. அதை நாம் வெளிப்படுத்தாமல் பிறர் செய்த செயல்களை பின்பற்றுகிறோம். இது நம்முடைய படைப்பாற்றல் திறனைக் குறைக்கிறது. எந்த ஒரு விஷயத்தையும் தன்னுடைய யோசனை மற்றும் சிந்திக்கும் திறனை வைத்து தனித்துவமாக முடிப்பது நம்முடைய திறமையை மேம்படுத்திக் காட்டும். இந்த படைப்பாற்றல் திறன் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவத்தை கொண்டிருக்கும். இந்த தனித்துவம் தான் படைப்பாற்றலின் அடிப்படை. கேம்கள் ஒவ்வொன்றும் ஒரு தனித்துவத்தை கொண்டிருக்கும். ஆக்ஷன், ஹாரர், ரேசிங் என ஒவ்வொரு ஜானர்க்கு ஏற்றது போல் நம் சிந்தனைகளை தூண்டும். இந்த தூண்டுதல் தான் படைப்பாற்றல் சிந்தனைக்கான அடித்தளமாகும். போட்டித் தேர்வுகளில் கேள்விகள் நம் படைப்பாற்றல் சிந்தனையை சோதித்து பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இந்த கேள்விகளுக்கு விடை காண வேகமாகவும், ஆழமாகவும் சிந்திக்க வேண்டும். அதற்கு இந்த படைப்பாற்றல் திறன் பேருதவியாக இருக்கும். இதை கேமிங் மூலம் எளிதில் கற்றுக் கொள்ளலாம்.

வீடியோ கேம்ஸ் விளையாட நினைக்கும் தொடக்க காரர்களுக்கு சில குறிப்புகள்

முதலில் இந்த உலகில் அனைத்து விஷயங்களுக்கும் ஒரு எல்லை உண்டு. அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கேற்ப எதையும் அளவோடு எடுத்துக் கொள்வது சிறந்தது. அனைத்து விஷயங்களிலும் நன்மை மற்றும் தீமை என்று இரண்டுமே கலந்திருக்கும். வீடியோ கேம்கள் விளையாடுவதும் அது போலத்தான், கேமில் மூலம் நாம் பல வாழ்க்கை திறன்களை வளர்த்துக் கொண்டாலும். அதற்கு அடிமையாகி விடாமல் இருப்பது மிகவும் முக்கியம்.  அடிமையாகாமல் இருப்பது மற்றும் கேமில் சிறப்பாக அமைய சில குறிப்புகளை பின்பற்றலாம்.

  • கேம்கள் விளையாட தொடங்கும் போது குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னர் விளையாடுவதை தவிர்க்க அறிவுறுத்தும் அலாரம் வைப்பது நல்லது.
  • இரவு நேரத்தில் விளையாடுவதை தவிர்த்து, முடிந்தவரை பகல் நேரத்தில் விளையாடலாம்.
  • ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சிறிய இடைவெளி எடுத்துக் கொள்வது சிறந்தது.
  • பொழுதுபோக்கிற்காக வீடியோ கேம்கள் விளையாட நினைக்காமல் ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்ள வேண்டும் என்று எண்ணி விளையாடுங்கள்.
  • தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக விளையாடுவதை நிறுத்திவிட்டு கண்கள் மற்றும் மூளைக்கு சற்று ஓய்வு கொடுங்கள்.
  • நேரத்தை அட்டவணைப் படுத்த வேண்டும், கேம்கள் விளையாடுவதற்கு என ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி அப்போது மட்டும் விளையாடுவது சிறந்தது.

முடிவு

இறுதியாக, நம் வாழ்க்கை பல திருப்பங்கள் மற்றும் சுவாரஸ்யங்கள் நிறைந்த ஒன்றாகும். அது மட்டுமின்றி நாம் பல கனவுகள் மற்றும் இலக்குகளை வெற்றி அடைய வேண்டும் என்று நினைக்கிறோம். என்னுடைய வாழ்க்கையிலும் நான் பல இன்னல்கள் மற்றும் பிரச்சினைகளை சந்தித்தேன். ஆனால் சோர்ந்து போகவில்லை. தொடர்ந்து முயற்சி செய்து படிப்பு மற்றும் வேலை என இரண்டிலும் சிறப்பான நிலையை அடைந்தேன். இதற்கு காரணம் என்னவென்றால் தோல்வியடையும் நேரங்களில் தன்னம்பிக்கையை கைவிடாமல் போராட வேண்டும் என்ற எண்ணம். இந்த விடாமுயற்சி, தன்னம்பிக்கை மற்றும் போராடும் திறன் என அனைத்தையும் நான் வீடியோ கேம்களை விளையாடுவது மூலம் கற்றுக் கொண்டேன். வீடியோ கேம்களை விளையாடுவது பொழுதுபோக்கிற்காக மட்டும் என் நினைப்பது தவறு. கேமிங் மூலம் தன் விளையாட்டு திறனை பலர் பணமாக மாற்றுகின்றனர். அதற்கு காரணம் அவர்கள் வித்தியாசமான கோணத்தில் இருந்து சிந்தித்து செயல்படுவது. கேமிங் மூலம் நான் கற்றுக்கொண்ட வாழ்க்கைத் திறன்களை பகிர்ந்து கொண்டேன், இது உங்களுக்கும் நன்மை பயக்கும் என நம்புகிறேன்.

Leave a Reply