முன்னுரை
முதலில் இன்றைய நாட்களில், நாம் அனைவரும் மிக வேகமாக நகரும் உலகில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். பணம் சம்பாதிப்பது, வேலைக்கு செல்வது, கடன் அடைப்பது என ஏராளமான இன்னல்கள் நம்மை சூழ்ந்துள்ளன. இளைஞர்களுக்கு சிறந்த வேலையை தேடுவதில் மன அழுத்தம், மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற மன அழுத்தம், பணியில் இருப்பவர்களுக்கு மேலும் சம்பாதிக்க வேண்டும் என்ற மன அழுத்தம் என அனைவருக்கும் ஒரு வகையான மன அழுத்தம் உள்ளது. இந்த மன அழுத்தத்தை குறைக்கவும், கட்டுப்படுத்தவும் நிறைய எளிய வழிமுறைகள் உள்ளன. ஆனால் அதைப் பற்றி தெரியாத பலர் மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வர முடியாமல் தவிக்கின்றனர். மன அழுத்தம் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது? இதில் இருந்து எவ்வாறு நான் எளிதாக மீண்டு வந்தேன் என்கிற முழு தகவல்களையும் இந்த பதிவில் நாம் காண்போம்.
மன அழுத்தம் என்றால் என்ன?
இன்றைய தலைமுறை மக்கள் மன அழுத்தம் என்பதை ஒரு வகை மன நோயாக கருதுகின்றனர். அதிக அளவிலான பணிச்சுமை, தீய பழக்கங்கள், தூக்கமின்மை, கடந்த கால நிகழ்வுகளை நினைத்து வருந்துதல் போன்ற காரணங்கள் மன அழுத்தத்தை உண்டாக்கும் பொதுவான காரணிகளாக பார்க்கப்படுகிறது. ஆனால் என்னுடைய பார்வையில் மன அழுத்தம் என்பது ஒரு வகை குழப்பமான மனநிலையில் மூளை சிந்தித்து செயல்பட முடியாத சூழ்நிலை என கருதுகிறேன். இந்த மனநிலை எனக்கு மட்டும் தான் இருக்கிறதா என ஆராய்ந்து பார்க்கும் பொழுது என்னைப் போல் பலர் இந்த பிரச்சினையை சந்திக்கின்றனர் என்பது தெரிந்தது. நான் ஏன் இவ்வாறு மன அழுத்தத்தில் இருக்கின்றேன் என சிந்தித்து பார்க்கையில் எனக்கு இருந்த சில பழக்கவழக்கங்களினால் கூட இந்த மனநிலை உருவாகலாம் என்பதை அறிந்தேன். எனக்கு இருந்த சில எண்ணங்கள் மற்றும் சிந்தனைகளில் சில மாற்றங்களை செய்ததன் மூலம் நான் விரைவாக மன அழுத்தத்தில் இருந்து எவ்வாறு மீண்டு வந்தேன் என்கிற தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்.
1. ஆழ்ந்த தூக்கம் மன அழுத்தம் போக்கும் மருந்தாகும்
இன்றைய நாட்களில் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் பணியாளர்களுக்கு இரவுப் பொழுது பணியைக் கொடுக்கின்றன. இது நம்முடைய தினசரி பழக்கவழக்கங்களில் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது. பகல் பொழுதில் முழுவதும் வேலை செய்து, இரவிலும் ஓய்வின்றி பணியாற்றுவது உடல் சோர்வையும் மன இறுக்கத்தையும் அதிகப்படுத்துகிறது. எனவே முடிந்தவரை 8 முதல் 9 மணி நேரம் எந்த விதமான இடையூறின்றி உறங்க வேண்டும். நாம் விழித்திருக்கும் நேரத்தில் நம்முடைய அனைத்து உடல் உறுப்புகளும் இயங்கிக் கொண்டே இருக்கிறது. உறங்கும் பொழுது தான் நம்முடைய அனைத்து உள்ளுறுப்புகள் மற்றும் வெளி உறுப்புகள் இரண்டும் ஓய்வு பெறுகின்றன. எனவே அவை மீண்டும் செயல்படுவதற்கு தயாராகிவிடும்.
ஆழ்ந்த உறக்கத்திற்கு சில குறிப்புகள்
- தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் தொலைக்காட்சி மற்றும் மொபைல் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இதில் இருந்து வெளிவரும் ப்ளூ லைட் கண் பாதிப்பை ஏற்படுத்தும்.
- இரவு நேர உணவை சற்று குறைத்துக் கொள்ளலாம். எளிதாக செரிமானம் ஆகும் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- தூங்குவதற்கு முன் டீ மற்றும் காபி போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மாறாக பால் மற்றும் பழங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
2. அதிகாலை நேரத்தில் உடற்பயிற்சி மற்றும் யோகா மன அழுத்தம் குறைக்கும் கருவியாக பயன்படுகிறது
உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வது உடலுக்கு மட்டும் நல்லது என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் நான் இந்த பழக்கத்தை தொடர்ந்து கடைப்பிடித்து வந்ததால் என் உடல் மற்றும் மனம் இரண்டுமே அமைதி மற்றும் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை உணர்ந்தேன். மனம் மற்றும் உடல் இரண்டையும் ஒருநிலைப்படுத்துதல் நம் மன அழுத்தத்தை குறைப்பது மட்டுமின்றி நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ள உதவுகிறது. அதிகாலை நேரத்தில் ரன்னிங், ஜாகிங் மற்றும் வாக்கிங் போன்ற உடற்பயிற்சிகளை செய்யலாம். இதுபோலவே மூச்சு பயிற்சி செய்வதும் மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
குறிப்புகள்
- காலை நேரத்தில் 20 முதல் 30 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
- மேலும் உடற்பயிற்சி என்பதற்காக அதிக பளு தூக்குதல் மற்றும் அதிக நேரம் உடற்பயிற்சி போன்றவற்றை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
3. பயணம் செய்வதால் மன அழுத்தம் குறையும்
மன அழுத்தத்தை குறைப்பதற்கு மிகவும் அவசியமாக நான் எடுத்துக்கொள்ளும் ஒரு முக்கிய மருந்து பயணம். வேலைக்கு செல்லுதல், வேலையை முடித்தல், மீண்டும் வீட்டிற்கு வருவது, உறங்குவது என்று இந்த சுழற்சி வாழ்க்கையில் இருந்து விடுபட வேண்டும். அவ்வப்போது சிறிய பயணங்கள் செய்வது நம் மனதிற்கு இதமளிக்கும், குறிப்பாக புத்துணர்ச்சியுடன் இருக்க உதவும். மலைப் பகுதிகள், கோவில்கள் மற்றும் கடற்கரை என மனம் காண விரும்பும் இடங்களுக்கு பயணிக்கும் பொழுது நம்முடைய மனது ஒரு வகையான இனம் புரியாத மகிழ்ச்சியை அடைகிறது. மறுபக்கம் புதிய நபர்களுடன் எவ்வாறு பழகுவது, புதிய கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய சின்னங்கள் பற்றி அறிந்து கொள்வது என பல வழிகளில் பயணம் நம் மன அழுத்தத்தை குறைக்கிறது. அது மட்டுமின்றி கடந்த கால நிகழ்வுகளை மறக்கவும் உதவுகிறது.
குறிப்புகள்
- குறிப்பாக தனிமையாக பயணம் செய்வது மன அமைதியை மேம்படுத்துகிறது. எனவே முடிந்தவரை தனித்து பயணிப்பது சிறந்தது.
- முடிந்தவரை இரவு நேர பயணங்களை தவிர்ப்பது நல்லது.
- தேவையான பொருட்களை முன்னதாக பேக்கிங் செய்து கொள்ளவும்.
4. மன அழுத்தம் குறைய வீடியோ கேம்கள் விளையாடலாம்
வீடியோ கேம்கள் விளையாடுவது தவறு, ஏனென்றால் அதற்கு அடிமையாகி விடுவோம் என பலர் கூறுகின்றனர். மாறாக நான் வீடியோ கேம்களை பயன்படுத்திய முறை எனக்கு மன அழுத்தத்தில் இருந்து விடுபட பெரும் உதவியாக இருந்தது. அது மட்டுமின்றி வீடியோ கேம்களை விளையாடுவது மூலம் பல்வேறு வகையான வாழ்க்கைத் திறன்களை வளர்த்துக் கொள்ள முடியும். இது எவ்வாறு மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது என்றால், நாம் ஒரு விஷயத்தை பற்றி தொடர்ந்து யோசித்து கொண்டே இருப்பது குழப்பமான மனநிலை மற்றும் மனச்சோர்வை ஏற்படுத்துகிறது. மாறாக நம் கவனத்தை வீடியோ கேம்கள் மீது செலுத்தும் பொழுது, மனம் அதை மறந்து விளையாடும் கேமில் முழு ஈடுபாடு அடைகிறது. கேம்களில் உள்ள நிலைகளை கடந்து வெற்றி பெறும்போது நமக்கு ஒரு உத்வேகம் கிடைக்கிறது. எனவே நான் வீடியோ கேம்களை, மன அழுத்தத்தை குறைக்க உதவும் ஒரு பொழுதுபோக்கு அம்சமாக கருதுகிறேன்.
குறிப்புகள்
- தொடர்ந்து பல மணி நேரம் விளையாடுவதை தவிர்த்து, வரம்புகள் பின்பற்ற வேண்டும்.
- இரவு நேரங்களில் விளையாடாமல் பகல் நேரத்தில் விளையாடுவது சிறந்தது.
5. மொபைல் மற்றும் சமூக ஊடகங்கள் பயன்படுத்துவதை குறைப்பது
நாம் நன்றாக யோசித்து பார்த்தால் இந்த மன அழுத்தம், கவலை மற்றும் மன உளைச்சல் போன்றவை அதிகமாக மொபைல் போன்கள் வாயிலாக தான் நம்மை பாதிக்கிறது. மொபைல்கள் பயன்பாடு அதிகமாக இல்லாத பொழுது நாம் அதிக நேரத்தை நம் நண்பர்களுடன் மற்றும் விளையாட்டு போன்றவற்றில் கவனம் செலுத்துவோம். இதனால் நம் உடல்நலம் மற்றும் மனநலம் சிறப்பாக இருந்தது. ஏனென்றால் மனம் விட்டு பேசுவதற்கு நல்ல நண்பர்கள் இருந்தால், நம் பிரச்சினைகளை அவர்களிடம் பகிர்ந்து கொண்டால் மன அழுத்தம் குறைந்துவிடும். ஆனால் இன்றைய தலைமுறை இளைஞர்கள் தொடங்கி முதியவர்கள் வரை அனைவரும் ஆன்லைன் நண்பர்களை தேடுகின்றனர். அருகில் உள்ள மனிதர்களிடம் பழகுவதை தவிர்த்து சமூக ஊடகங்களில் இருக்கும் நண்பர்களை தேடி அலைவது இன்றைய கலாச்சாரமாக உள்ளது. டிஜிட்டல் அடிக்சன் என்னும் மன நோய் இன்றைய மனிதர்களின் மூளையை யோசிக்க விடாமல் தடுக்கிறது. மொபைல் மற்றும் இணையதளம் போன்றவற்றை நம் அறிவை வளர்த்துக் கொள்ள பயன்படுத்த வேண்டும். மொபைல் பயன்பாட்டை குறைத்துக் கொள்வது மன அழுத்தத்தை குறைக்க உதவும்.
குறிப்புகள்
- காலையில் எழுந்த உடன் மொபைலை கையில் எடுப்பதை தவிர்க்கவும்.
- இரவு உறங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர், மொபைல் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
6. அதிக அளவிலான பணிச்சுமை மற்றும் தேவையற்ற சிந்தனைகளை குறைத்துக் கொள்ளலாம் 782
இன்றைய நாட்களில், பணம் சம்பாதிப்பது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பலர் அதிக நேரம் பணியாற்றுவது, ஓவர் டைம் பார்ப்பது மற்றும் இரவு நேர பணி போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். இந்த செயல் உடல் மற்றும் மனம் இரண்டையுமே பெரிய அளவில் பாதிக்கிறது. இதுவே மன அழுத்தம் உண்டாக முக்கிய காரணமாக அமைகிறது. எனவே முடிந்தவரை இரவு நேர பணியாற்றுவதை குறைத்துக் கொள்ளுங்கள். அதிக அளவிலான பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பணியாற்றி கொண்டே இருப்பதைத் தவிர்க்கவும். ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை சிறிய இடைவெளி எடுத்துக்கொள்ளலாம். உணவு இடைவெளியில் சிறிது நேரம் உறக்கம், நம் உடல் மற்றும் மூளை சிறப்பாக செயல்பட உதவுகிறது. தொடர்ச்சியாக ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றுபவர்கள், எழுந்து சிறிது நேரம் நடைபயிற்சி செய்வது நல்லது.
குறிப்புகள்
- சிறிய பணிகளை நேரம் கிடைக்கும் பொழுது முடித்து கொள்ளலாம். ஏனென்றால் சிறிய வேலைகளை சேர்த்து வைத்துக் கொண்டு செல்வது பின்னர் அதிக பணிகளை ஒரே நேரத்தில் முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு ஆளாக்கும்.
- குழு உறுப்பினர்களுடன் வேலையை பகிர்ந்து கொள்ளுங்கள், எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும், குழுவில் உள்ள உறுப்பினர்கள் சமமாக வேலையை செய்து முடித்தால் எளிதாக பணியை முடிக்க முடியும்.
தீர்வு
முடிவாக, மன அழுத்தம் என்பது ஒரு நோயல்ல, ஒரு வகை மன குழப்பம் மட்டுமே. இதனைப் பலர் தனக்கு இருக்கும் பெரிய நோயாக கருதுகின்றனர். நம் அன்றாட வாழ்வில் நேர்மறை மற்றும் எதிர்மறை செயல்கள் என இரண்டுமே கலந்திருக்கும். அது போலத்தான் மன அழுத்தம் எளிதாக நாம் எளிதாக கடந்து வர முடியும். மேற்கூறிய அனைத்து செயல்பாடுகளும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட நான் தினமும் செய்கின்ற செயல்பாடுகள் ஆகும். இந்த பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பது மிகவும் கடினமானது இல்லை. இந்த செயல்கள் மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வருவதற்கு மட்டுமின்றி நம் வாழ்க்கை முறைகளையும் மேம்படுத்துகிறது. இந்த பதிவில் மன அழுத்தத்தை எதிர்கொண்ட என்னுடைய அனுபவத்தை பகிர்ந்துள்ளேன். இது உங்களுக்கும் பயனளிக்கும் என நம்புகிறேன்.